பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ஓசூர்: ஓசூர் அடுத்த, பாகலூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஓசூர் அடுத்த பாகலூரில், புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான
தேர்த்திருவிழா, கடந்த, 6ம் தேதி துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும்
அபிஷேக ஆராதனை நடந்தது. 8ம் தேதி யுகாதி தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று மதியம், 1 மணிக்கு நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, பஸ் ஸ்டாண்ட், வி.ஏ.ஓ., அலுவலகம், தேர்ப்பேட்டை வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை அடைந்தது. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பாகலூர் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.