அகஸ்தீஸ்வரர் கோவிலில் சித்திரை விழா ஏற்பாடு தீவிரம்
ஈரோடு: ஈரோட்டை அடுத்த காங்கேயம்பாளையத்தில், காவிரி ஆற்றின் நடுவில், அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. மணலால் சிவலிங்கத்தை பிடித்து கம்பங்கூழ் படைத்து பிரம்மஹத்தி தோஷம் நீங்க அகஸ்தியர், இங்கு தவம் செய்ததாக கருதப்படுகிறது. இங்கு சித்திரை முதல் நாளில் வழிபட்டு சென்றால் தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இந்நிலையில் வரும், 14ம் தேதி சித்திரை திருவிழா நடக்கிறது. விநாயகர் வழிபாட்டுடன் விழா நேற்று துவங்கியது. பின்னர் லட்சார்ச்சனை நடந்தது.
இதுகுறித்து கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியது: சித்திரை புத்தாண்டு தினத்தன்று,
காலையில் சங்காபிஷேகம் நடந்த பின்பு, பக்தர்களுக்கு கம்மங்கூழ் அளிக்கப்படும். மாலை வரை தொடர்ந்து கூழ் வழங்கப்படும். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக, காவிரி ஆற்றின் நடுவே உள்ள ஆகாய தாமரைகளை அகற்றி உள்ளோம். கார், டூவீலர்கள் நிறுத்த ஸ்டாண்ட்
அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட பக்தர்கள் வந்து செல்ல வசதியாக, பரிசல் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.