சித்திரை திருவிழா: வில், அம்புடன் புறப்பட்ட அம்மன்!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று அம்மனும், பிரியாவிடையுடன் சுவாமியும் வில், அம்பு ஏந்தி போருக்கு புறப்பட்ட அற்புத காட்சி நடந்தது.சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம், மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. ஒன்பதாம் நாள் திருவிழாவான நேற்று மீனாட்சி அம்மன், தடாதகை பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரியும் போது திக்கு விஜய புராண வரலாற்று நிகழ்வை குறிக்கும் வகையில், திக்கு விஜயம் நேற்று நடந்தது.
பிரதிநிதிகள் அழைப்பு: சொக்கநாதர் பிரதிநிதியாக சிறுவன் சிவகணேஷ், மீனாட்சி அம்மன் பிரதிநிதியாக சிறுமி குகப்பிரியா இருந்தனர். கோயில் சார்பில் உத்திரபாண்டி பட்டர், சாமிநாதபட்டர், சண்முகசுந்தர பட்டர், காலாசிநாதர் பட்டர் ஆகியோர் சிறுவன், சிறுமியை வடக்காவணி மூல வீதியில் உள்ள வீட்டில் இருந்து கோயிலுக்குள் அழைத்து வந்தனர். அங்கு சேர்வார் மண்டபத்தில் வெண் பட்டு உடுத்தி பிரியாவிடையுடன் சுவாமியும், ரோஜா நிறத்தில் பட்டு உடுத்தி அம்மனும் வில், அம்பு ஏந்தி மின் அலங்கார இந்திர விமானத்தில் எழுந்தருளினர்.
மீனாட்சி திக்கு விஜயம்: கோயிலுக்குள் சேர்வார் மண்டபத்தில் இருந்து இரவு 7.00 மணிக்கு பிரியாவிடையுடன் சுவாமியின் இந்திர வாகனத்தில் பிரதிநிதி சிவகணேஷ் வில், அம்பு ஏந்தி அமர வைக்கப்பட்டார். அதை தொடர்ந்து அதிகார நந்தி, தேவர் சப்பரம் வந்தது. அடுத்ததாக அம்மனின் இந்திர வாகனத்தில் பிரதிநிதி குகப்பிரியா வில், அம்பு ஏந்தி அமர வைக்கப்பட்டார். இந்திர வாகனங்கள் அம்மன் சன்னதி வழியாக புறப்பாடாகி வடக்குமாசி வீதி, கீழமாசி வீதி சந்திப்பு இடத்தில் உள்ள லாலாஸ்ரீ ரெங்க சத்திரத்தில் எழுந்தருளி, மீனாட்சி அம்மன் திக்கு விஜயம் நடந்தது. பின் மாசி வீதிகளில் வலம் வந்து நேற்று இரவு 1.00 மணிக்கு கோயிலுக்குள் சேர்த்தியானது.
இன்று திருக்கல்யாணம்: சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் கோயில் வடக்காடி வீதி - மேற்காடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மணமேடையில் இன்று காலை 8.30 மணிக்கு மேல் காலை 8.54 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காலை 8.00 முதல் திருக்கல்யாண விருந்து நடக்கிறது. ஏற்பாடுகளை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் செய்து வருகிறது. திருக்கல்யாண மொய் காணிக்கையை கோயில், கோயிலுக்கு வெளிப்பகுதி, சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம். நாளை (ஏப்.,20) காலை 6.00 மணிக்கு கீழமாசிவீதியில் தேரோட்டம் துவங்குகிறது.தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நா.நடராஜன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மாப்பிள்ளை அழைப்பு விருந்து ஜோர்: மதுரை சித்திரை திருவிழாவில் இன்று காலை திருக்கல்யாணம் நடக்கிறது. சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்து திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் நடந்தது. திருக்கல்யாண விருந்துக்காக காய்கறி வெட்டும் சேவையில் ஈடுபட்டோருக்கு பொங்கல், கேசரி, பஜ்ஜி, காபி வழங்கப்பட்டது.
டிரஸ்ட் தலைவர் விவேகானந்தன் கூறியதாவது: திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று காலை 7.00 மணி முதல் திருக்கல்யாண விருந்து துவங்கி பக்தர்கள் வரும் வரை வழங்கப்படும். கல்கண்டு சாதம், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், வடை, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், உருளை கிழங்கு கறி, பச்சடி, ஊறுகாயை பாக்கு தட்டில் வைத்து தண்ணீர் பாக்கெட்டுடன் ஒரு லட்சம் பேருக்கு விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.