உலகவாழியம்மன் கோவில் தேர் திருவிழா
புதுச்சேரி: அரியூர் உலகவாழியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த அரியூர் உலகவாழியம்மன் கோவில் செடல் மற்றும் தேர் பிரம்மோற்சவ விழா 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து அம்பாளுக்கு தினமும் காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் சாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் முத்துப்பல்லக்கில் சாமி வீதியுலா நடந்தது. முக்கிய திருவிழாவான செடல் மற்றும் தேர் திருவிழா நேற்று நடந்தது. மாலை 4:30 மணிக்கு நடந்த செடல் உற்சவத்தில், பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதை தொடர்ந்து, தேரோட்டம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நாளை 24ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.