உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடசென்னையில் இசைவிழா நிறைவு

வடசென்னையில் இசைவிழா நிறைவு

சென்னை : வடசென்னையில் இசை விழா நிகழ்ச்சி நிறைவு பெற்றது. வடசென்னையில் இசைவிழா நிகழ்ச்சி, கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள ஸ்ரீசாயி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலை பள்ளியில், கடந்த, 20ம் தேதி துவங்கியது. விழாவின் நிறைவு விழா, கடந்த, 23ம் தேதி நடந்தது. நிகழ்ச்சியில் கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீமகாதேவனுக்கு டி.கே.பட்டம்மாள் நினைவு விருதை, தினமணி நாளிதழ் ஆசிரியர் வைத்தியநாதன் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:வடசென்னையில் இசை இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்தவர் டி.எஸ்.தியாகராஜன். இசையை ஆரம்ப பள்ளிகளில் இருந்து துவக்க வேண்டும். குழந்தைகளுக்கு தேவாரம், திருவாசகம், தேச பக்திப் பாடல்கள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை சொல்லி கொடுங்கள். விளம்பர வெளிச்சம் பட்ட பின்பும்கூட, பட்டம்மாளின் இசை, பட்டுப் போகாமல், அவரது பேத்தியிடம் இன்னும் தங்கியிருக்கிறது. இவ்வாறு வைத்தியநாதன் பேசினார். விழாவில், நித்யஸ்ரீமகாதேவனின் இசை நிகழ்ச்சி நடந்தது. வடசென்னை இசை அகாடமி நிறுவனர் டி.எஸ்.தியாகராஜன், அகாடமி தலைவர் கா.ச.கஜேந்திரன், வடசென்னை நுண்கலை கல்வி கழக செயலர் உதயகுமார், பள்ளி முதல்வர் சுந்தராதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !