உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை காப்போம்!

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை காப்போம்!

காஞ்சிபுரம்: உலகில் இப்படியொரு கலைச் செல்வம், வேறு எந்த நாட்டிலாவது இருக்குமா என, எண்ணத் தோன்றும் வகையில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கட்டடம் மற்றும் சிலைகள் அமைந்துள்ளன. இத்தகைய ஒரு கலை பொக்கிஷம், ரோம், நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களில் இருந்திருந்தால், அதை பாதுகாக்க, பல கோடி ரூபாயை செலவழிக்கவும், அதை பாதுகாக்கவும், அதீத முயற்சிகளை அந்தந்த நாடுகளின் நிர்வாகங்கள் முயற்சி மேற்கொள்ளும் என்பது உறுதி. ஆனால், தமிழகத்தின் பாரம்பரிய பெருமைக்கு கட்டியம் கூறும் அந்த சிற்பங்களுக்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அறவே இல்லாதது வேதனை அளிக்கிறது.

தமிழர் பெருமை பேசும் சிற்பங்கள்: கி.பி., 7ம் நுாற்றாண்டில், பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கிய காஞ்சிபுரத்தில், பல்லவ அரசர் ராஜசிம்மனால் கைசநாதர் கோவில் கட்டப்பட்டது. பின், 14ம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசர்களால் இக்கோவிலின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டன என கூறப்படுகிறது. சுமார், 1,300 ஆண்டுகள் பழமையான இக்கோவில், இன்று வரை வழிபாட்டு தலமாக உள்ளது. விமானம், மதில் சுவர் என, அனைத்து பகுதிகளிலும் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கோவிலின் மதில் சுவர்களில் உள்ள சிற்பங்கள், தமிழர்களின் வீரம், கலாச்சாரத்தை குறிப்பிடும் விதத்தில் உள்ளன. இக்கோவிலை, இந்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று வரை வழிபாட்டு தலமாக உள்ள பழமையான கற்கோவில்களில் கைலாசநாதர் கோவிலும் ஒன்று. பல்லவர்களின் கட்டடக்கலைக்கு மிகச்சிறந்த சான்றாகவும் இக்கோவில் விளங்குகிறது.

என்ன செய்யலாம்?:
மணலால் செய்யப்பட்ட சிற்பங்களா, கல்லால் செய்யப்பட்ட சிற்பங்களா? என, கைலாச நாதர் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரும், அந்த சிற்பங்களையும், கட்டடங்களையும் சுரண்டிப் பார்க்கின்றனர். அதை செய்யாதவாறு, ஒவ்வொரு சிற்பத்திற்கும் கண்ணாடி கூண்டு அமைத்து பாதுகாக்க வேண்டும் காற்று, மழை, வெப்ப மாசால் பாதிக்கப்படும் சிலைகளை, தகுந்த நவீன ஏற்பாடுகள் மூலம் பாதுகாக்க வேண்டும் சில ஆயிரம் ஆண்டுகளை கண்ட அந்த சிற்பங்களின் அருமை, பெருமை தெரியாமல், அதன் மீது ஏறி உட்காருவது, தட்டிப் பார்ப்பது, சுரண்டுவது போன்ற செயல்களை தடை செய்ய வேண்டும் சிலைகளை தொட முடியாதவாறு தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் ஒவ்வொரு சிற்பங்களையும் விளக்கும் அறிவிப்பு பலகைகள், பதாகைகளை வைக்க வேண்டும். சிலைகளின் சிறப்புகளை அறிந்த வல்லுனர்களை நியமித்து, அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்கு வருபவர்களை அப்படியே கோவிலுக்குள் விடாமல், கோவிலின் பாரம்பரிய சிறப்புகளை விளக்கும் படக்காட்சிகளை திரையிட்டு, ஒவ்வொரு சிலையையின் அருமை, பெருமைகளை, குறைந்தபட்சம், 30 நிமிடங்கள் விளக்கி, அதன் பிறகு உள்ளே செல்ல அனுமதித்தால், சிலைகளின் சிறப்புகளை அறிந்து கொள்வர்; அவற்றை பாதுகாக்கவும், பராமரிக்கவும் புரிந்து கொள்வர்.

அவசியத் தேவைகள்: கோவிலின் வெளிப்பகுதியை சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும். கூடுதல் வண்ண ஒளி விளக்குகள் அமைத்து, இரவிலும் இதன் பெருமையை அறியும் வகையில் செய்ய வேண்டும். பாதுகாப்புக்கு கூடுதல் பணியாளர் நியமிக்கப்பட வேண்டும். வெறும் பார்வையாளராக மட்டும் செயல்படும், தொல்பொருள் ஆய்வுத்துறை, கோவிலின் பெருமையை பறைசாற்றும் அமைப்பாக மாற வேண்டும். மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து, கோவிலை பராமரிக்கவும், அதன் பாரம்பரியத்தை வௌிப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !