அனுமதியின்றி கோயில் கட்ட முயற்சி சாமி சிலைகள் பறிமுதல்!
திருவாடானை: திருவாடானை அருகே அனுமதியின்றி கோயில் கட்ட முயன்றதால் சாமி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவாடானை அருகே ஓரியூரில் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தை இரு பிரிவினர் சொந்தம் கொண்டாடிவருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில் சிவன் கோயில் கட்ட முடிவு செய்து பூமி பூஜை செய்யபட்டது. இதற்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் போலீசார் பூமி பூஜையை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பிரச்னை நீடிக்கிறது. நேற்று காலை இந்துக்கள் தரப்பில் அந்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நந்தி சிலைகளை வைத்திருந்தனர். தகவலறிந்த திருவாடானை டி.எஸ்.பி., பொன்னரசு தலைமையில் போலீசார் அனைத்து சிலைகளையும் கைபற்றி திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு துணை தாசில்தார் முத்துகுமாரிடம் சிலைகள் ஒப்படைக்கபட்டு பாதுகாப்பான அறையில் வைக்கபட்டது.