பார்த்தசாரதி கோவிலில் துவங்கியது அஷ்டதள பாத பத்ம அர்ச்சனை
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வேதவல்லி தாயாருக்கு 108 தங்கத் தாமரை மலர்களால் அஷ்டதள பாத பத்ம அர்ச்சனை முறைப்படி துவங்கியது. முதல் நாளான நேற்று முன்பதிவு செய்த 45 பக்தர்கள் பங்கேற்றனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், வேதவல்லி தாயாருக்கு சேவார்த்திகள் மூலம் தங்க தாமரை மலர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை கொண்டு திருமலையில் செய்வதுபோல, அஷ்டதள பாத பத்ம அர்ச்சனைக்கான அனுமதி கோரியிருந்தது. அதற்கான உத்தரவு கிடைத்த நிலையில், முறைப்படி நேற்று அர்ச்சனை துவக்கப்பட்டது. மாலை 4:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடந்த இந்த சிறப்பு அர்ச்சனையில் முன்பதிவு செய்த 45 பக்தர்கள் பங்கேற்றனர். இனி, ஒவ்வொரு செய்வாய்க்கிழமையும் இந்த அர்ச்சனை நடத்தப்படும். அதற்கான முன்பதிவும் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.