உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவசாய கிணற்றில் 12 கருங்கல் சிலைகள் மீட்பு!

விவசாய கிணற்றில் 12 கருங்கல் சிலைகள் மீட்பு!

திருத்தணி: திருத்தணி அருகே, விவசாய  கிணற்றில் இருந்து, அம்மன், சிவலிங்கம், நந்தி உட்பட, 12 கருங்கல்  சிலைகளை, வருவாய் துறையினர் மீட்டுள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, ராமகிருஷ்ணாபுரம்  கிராமத்தைச் சேர்ந்த தேசப்ப நாயுடு மகன் லோகநாதன், 45; விவசாயி. இவருக்கு  சொந்தமான விவசாய கிணற்றில், கருங்கல் சிலைகள்  இருப்பதை லோகநாதன் நேற்று பார்த்தார். இதுகுறித்து, செருக்கனுார் கிராம நிர்வாக அலுவலருக்கு, லோகநாதன் தகவல் கொடுத்தார். உடன், செருக்கனுார் வருவாய்  அலுவலர் பார்வதி, கிராம நிர்வாக அலுவலர் பாலச்சந்திரன்,  உதவியாளர் அசோக்  ஆகியோர், மதியம் விவசாய கிணற்றுக்கு சென்று பார்வையிட்டனர்.

தொடர்ந்து கிராமவாசிகள் உதவியுடன், கிணற்றில் இருந்த ஒன்றரை அடி உயரமுள்ள   சிவலிங்கம், 2 அடி உயரமுள்ள இரண்டு துவாரக பாலகர்கள், சாமுண்டீஸ்வரி  அம்மன், 1 அடி உயரமுள்ள நந்தி, ஒன்றரை அடி நீளமுள்ள ஐந்து பீடங்கள்  மற்றும் இரண்டு பலிபீடங்கள் போன்றவற்றை மீட்டனர்.  மீட்கப்பட்ட சிலைகளை, திருத்தணி  தாசில்தார் அலுவலகத்திற்கு, வருவாய் துறையினர், சரக்கு ஆட்டோவில் கொண்டு  சென்றனர்.  எங்கள் கிராமத்தில் கிடைத்த சிலைகளை எங்களுக்கே வழங்க வேண்டும்  என, கிராமவாசிகள் வருவாய் துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். தகவல் அறிந்ததும், திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர். சென்னையில், சிலைகள் கடத்தல் வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டதை  தொடர்ந்து, விவசாய கிணற்றில் இந்த சிலைகளை மர்ம நபர்கள் வீசி சென்றனரா  என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !