மகா சிவராத்திரி; பிரயாக்ராஜில் மகர மேளா நிறைவு நாளில் 4-0 லட்சம் பேர் புனித நீராடல்
பிரயாக்ராஜ்: மகா சிவராத்திரியை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வந்த மகர மேளாவில் நேற்று ஒரே நாளில் 40 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் பிரசித்தி பெற்ற மகரமேளா திருவிழா ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. நாள்தோறும் திரளான பக்தர்கள் கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வந்தனர். இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, மகரமேளா நேற்றுடன் இறுதிக் கட்டத்தை எட்டியது. இதையொட்டி நாடு முழுதும் இருந்து திரளான மக்கள் பிரயாக்ராஜில் குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக படித்துறைகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை குவிக்கப்பட்டனர். படகுகளுடன், நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். பக்தர்கள் உடை மாற்றுவதற்கான அறைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டன. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நேற்று மட்டும், 40 லட்சம் பக்தர்கள் கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் மூழ்கி புனித நீராடினர். இதனால், பிரயாக்ராஜ் நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. மகர மேளா காலத்தில், 22 கோடி மக்கள் புனித நீராடியதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.