உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீட்கப்பட்ட சிலைகள்: தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு

மீட்கப்பட்ட சிலைகள்: தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு

சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாளின் சென்னை வீட்டில், போலீசார் பறிமுதல் செய்த சிலைகள் மற்றும் ஓவியங்களை, மத்திய தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை, ஆழ்வார்பேட்டை, முர்ரேஸ் கேட் சாலையில், சர்வதேச சிலை கடத்தல்காரன் தீனதயாள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 43 ஐம்பொன் சிலைகள், 71 கற்சிலைகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆறு சிலைகள், 75 பழங்கால ஓவியங்களை, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், டி.எஸ்.பி., சுந்தரம் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், நேற்று முன்தினம், தீனதயாளின் பீரோவில் பதுக்கி வைத்திருந்த, ஒன்பது சிலைகள் உட்பட, 125 சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த சிலைகளை, தமிழகதொல்லியல் துறை, முன்னாள் இயக்குனர் நாகசாமி ஆய்வு செய்து, பழமை வாய்ந்த சிலைகள், அபூர்வமான ஓவியங்கள் என்பதை உறுதி செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை ஆய்வு செய்ய வரும்படி, மத்திய தொல்லியல் துறை நிபுணர்களுக்கு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து, மத்திய தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் சத்யபாமா தலைமையிலான எட்டு பேர் நிபுணர் குழுவினர், சிலைகளை நேற்று காலை, 10:45 மணி முதல் ஆய்வு செய்து வருகின்றனர். முன்னதாக, நிபுணர் குழுவினர், போலீஸ் அதிகாரிகளுடன், 10 நிமிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். பின், ஒவ்வொரு சிலையையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். சிலைகள், எந்த நுாற்றாண்டில் செய்யப்பட்டவை; அப்போது ஆட்சியில் இருந்த மன்னர்கள் யார்; வரலாற்றுப் பின்னணி; எந்த கோவிலுக்கு சொந்தமானவை என்பது உள்ளிட்ட விவரங்களை, நிபுணர் குழுவினர் திரட்டி வருகின்றனர்.மிக துல்லியமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டி இருப்பதால், இன்னும், மூன்று தினங்களுக்கு ஆய்வு நடக்க இருப்பதாக நிபுணர் குழுவினர் கூறி உள்ளனர்.ஆய்வில் தெரியவரும் தகவல் அனைத்தும் ஆவணமாக மாற்றப்படுகிறது. வீடியோ பதிவும் செய்யப்படுகிறது.

கலை நேர்த்தியுடன் உள்ளன: இதுகுறித்து, தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி கூறியதாவது:போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள், ஐம்பொன், யானை தந்தம் உள்ளிட்ட பொருட்கள் அத்தனையும் பழமையானவை. மிகவும் கலை நேர்த்தியுடன் செய்யப்பட்டுள்ளன. முழுமையான சோதனைக்கு பின்னரே, சிலைகளின் ஆதி, அந்தம் உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும்.உதாரணத்திற்கு, ஒரு சிலையை ஒருவர் ஆய்வு செய்த பின், கூடுதல் தகவலுக்கு மற்றொரு நிபுணரும் ஆய்வு செய்வார். வரலாற்று ரீதியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கூடுதல் கால அவகாசம் தேவை. நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !