ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் நாளை சேக்கிழார் குரு பூஜை
ராசிபுரம்: ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், சேக்கிழார் குரு பூஜை விழா நாளை நடக்கிறது. சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில், 6ம் ஆண்டாக ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், நீரினால் விளக்கேற்றிய நமி நந்தி அடிகளின் தீப பேரொளி பெருவிழா, சேக்கிழார் குரு பூஜை நாளை (9ம் தேதி) காலை, 9 மணிக்கு துவங்குகிறது. காலை முதல், 63 நாயன்மார்களுக்கு பெரும் திருமஞ்சனம் அபிஷேகம் நடக்கிறது. பின்னர் பேரொளி வழிபாடு நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். மாலை, 5 மணிக்கு கைலாசநாதர் சன்னதியிலிருந்து துவங்கி கோவில் முழுவதும், உள், வெளி பிரகாரங்களில் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். இரவு, 8 மணிக்கு கயிலாய வாத்தியங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள், தெய்வச்சேக்கிழார், நமிநந்தி அடிகள் சுவாமிகள் ராஜவீதி வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.