உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரபுரநாதர் கோவிலில் திருமணம்: தட்சணையால் தவிக்கும் ஏழைகள்!

கரபுரநாதர் கோவிலில் திருமணம்: தட்சணையால் தவிக்கும் ஏழைகள்!

உத்தமசோழபுரம்: உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் திருமணம் செய்து வைக்க, அர்ச்சகர்கள் மற்றும் மேள வாத்தியக்காரர்கள், ஆயிரக்கணக்கில் தட்சணை கேட்பதால், ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர்.

சேலம், உத்தமசோழபுரத்தில் உள்ள கரபுரநாதர் கோவிலில், திருமணங்கள் அதிக அளவில் நடக்கிறது. அங்கு, ஏழை, பணக்காரர் என, அனைத்து தரப்பினரும் வேண்டுதல் வைத்தும், விரும்பியும் திருமணத்தை நடத்தி வருகின்றனர். அங்கு, திருமணம் செய்ய தகுந்த சான்றிதழ்களுடன், கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். கட்டணமாக, 1,500 ரூபாய் பெற்றுக்கொண்டு ரசீது கொடுக்கப்படுகிறது. திருமணத்துக்கு வரும் மணமக்கள், மாலை, தேங்காய், பழம் போன்ற பூஜை பொருட்களை கொண்டு வருவர். அர்ச்சகர்கள் இருவர், பிரதி மாதம் ஒருவர் என, பூஜை செய்துவருகின்றனர். அவர்கள், கோவிலில் திருமணத்தை நடத்திவைப்பர். அதற்கு தட்சணையாக, அவர்கள் வசதிக்கேற்ப, 500, 1,000, 2,000 வரை கொடுப்பர். மேலும், திருமணத்தின்போது கோவிலில் உள்ள மேளவாத்திய கோஷ்டியினர் நாதஸ்வரம் இசைப்பர். அவர்களுக்கும், தட்சணையாக பணம் கொடுக்க வேண்டும். முகூர்த்த நாட்களில், பத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள், இந்த கோவிலில் நடக்கிறது. வசதியானவர்கள், அர்ச்சகர்கள் கேட்டும் தட்சணையை கொடுத்து விடுகின்றனர். ஏழைகள், மண்டபத்தில் வைத்து, திருமணம் செய்தால், அதிக செலவாகும் என்பதால் தான், கோவிலில் வைத்து திருமணம் செய்கின்றனர். ஆனால், அர்ச்சகர்கள் கறாராக, 2,000 ரூபாய் கேட்கின்றனர். மேள வாத்தியக்காரர்கள், ஒரு திருமணத்துக்கு, 500 ரூபாய்க்கு குறைவாக பெறுவதில்லை. திருமண நிகழ்ச்சி என்பதால், அர்ச்சகர்களிடம் வாக்குவாதம் செய்யமுடியாமல், அவர்கள் கேட்கும் தட்சணையை, அரைகுறை மனதுடன் கொடுத்து செல்கின்றனர்.

கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறியதாவது
: கோவிலில், திருமணம் செய்துவைக்க, தட்சணையாக, 1,000 ரூபாய், 2,000 ரூபாய் என, எதையும் நிர்ணயம் செய்து வாங்குவது கிடையாது. வசதி படைத்தவர்கள், 5,000 ரூபாய் வரை கூட தட்சணையாக கொடுக்கின்றனர். ஏழைகள் என்றால், அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்கிறோம். மிகவும் சிரமப்படும் ஏழைகளுக்கு, இலவசமாக கூட திருமணங்களை நடத்தி வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !