திருமலையப்பபுரம் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ஆழ்வார்குறிச்சி :திருமலையப்பபுரம் செல்வவிநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருமலையப்பபுரத்தில் ராமநதி வடக்கு கரையில் செல்வவிநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, மகா கணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி ஆகிய வைபவங்களுடன் துவங்கியது. மாலை 5 மணிக்கு 1ம் கால யாகசாலை பூஜையும், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தீர்த்த சங்கிரகணம், யஜமான வர்ணம், ஆர்ச்சார்ய வர்ணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் ஆகியன நடந்தது. இரவு 9 மணியளவில் யாகசாலை பிரவேசமும், யாகசாலை பூஜைகளும், யந்திர ஸ்தாபனமும், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலை 7 மணியளவில் 2ம் கால யாகசாலை பூஜையும், ஸ்பரிசாகுதி, மகா பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. பின்னர் கடையம் கே.எஸ்.முத்துக்குமார் பட்டர், சங்கர்நகர் பாலசுப்பிரமணிய பட்டர், சேரன்மகாதேவி ராஜ் பட்டர், ரவணசமுத்திரம் கிருஷ்ணபட்டர் சிறப்பு பூஜைகளை நடத்தினர். யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளல், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஆகியன நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகமும், அன்னதானமும் நடந்தது. கோயில் பூஜைகளை ஓதுவார் முப்புடாதியும், கும்பாபிஷேகம் நடக்கும் போது பொட்டல்புதூர் கவுன்சிலர் பழனி தேவாரமும் பாடினார். விழாவில் செல்வவிநாயகர் கோயில் விழாக் கமிட்டியினர் மற்றும் திருமலையப்பபுரம், பொட்டல்புதூர், கடையம், முதலியார்பட்டி உட்பட சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.