உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துபந்தல் விழா

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துபந்தல் விழா

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில், தேனுபுரீஸ்வரர் கோவிலில், திருஞானசம்பந்தர் எழுந்தருளிய முத்துபந்தல் பெருந்திருவிழா வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் கோவில் பாடல் பெற்ற தலம். காமதேனுவின் 4 பெண்களுள் பட்டி என்பவள் தேனுபுரீஸ்வரரை நாள்தோறும் பூஜித்து முக்தி பெற்றதால் இத்தலத்திற்கு பட்டீஸ்வரம் என பெயர் வந்தது. இக்கோவிலில் ஆனி மாதத்தில் முத்துபந்தல் விழா நடைபெறும். கடந்த, ஐந்து ஆண்டுகள் வரை கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்றதால் முத்துபந்தல் விழா நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த ஜனவரி, 29ம் தேதி, கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முத்துபந்தல் விழா கடந்த, 13ம் தேதி துவங்கியது. விழாவின் இறுதி நாளான நேற்று, திருஞானசம்பந்தர், தேனுபுரீஸ்வரர் வழங்கி அருளிய முத்துபந்தலில் காட்சி அளித்து தேனுபுரீஸ்வரரை வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், 30 அடி நீளமும், 20 அடி உயரமும் உள்ள முத்து பல்லக்கினை சுமந்துகொண்டு சென்றனர். வழியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நின்று வழிப்பட்டனர். இரவு 8 மணிக்கு, முத்து விமானத்தில் தேனுபுரீஸ்வரர் காட்சியளித்தலும், திருஞானசம்பந்த மூர்த்தி முத்துபந்தலில் வீதிவலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !