ரமலான் நோன்பு இருக்கும் இந்துக்கள்
ஜெய்சல்மர் : ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் ராஜஸ்தானில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த இந்துக்கள் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். ஜெய்சல்மர், பர்மர் போன்ற மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றன. இந்த கிராமங்களில் முஸ்லீம்கள் தீபாவளி கொண்டாடுவதும், பஜனை பாடல்கள் பாடுவதுடன் அன்றாடம் விநாயகர் வழிபாடு மேற்கொள்வதும் காலம் காலமாக நடந்து வருகிறது. இதே போன்று இங்குள்ள இந்துக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்கிறார்கள். இங்குள்ள இந்து குடும்பங்கள் பலவும் தினமும் 5 முறை தொழுகை நடத்துவதையும், பாகிஸ்தானில் உள்ள சிந்து நகருக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கிராமங்களில் வசிக்கும் இந்து- இஸ்லாமிய மக்கள் ஒருவர் மற்றொருவரின் பண்டிகைகளை கொண்டாடுவதும், தங்களின் சுக, துக்கங்களை பகிர்ந்து கொண்டிருப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.