திருவண்ணாமலை கிரிவலப்பாதை ரூ.65 கோடியில் விரிவாக்கம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல பாதை சாலையை, 65 கோடி ரூபாய் மதிப்பில், விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கின. ஆம்புலன்ஸ் செல்ல, தனி வழி அமைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில், பவுர்ணமிதோறும், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், கார்த்திகை தீபம் மற்றும் சித்ரா பவுர்ணமியின் போது, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், 14 கி.மீ., துாரம் கிரிவலம் செல்வர்.கிரிவலம் செல்லும் சாலை தற்போது, 30 அடி அகலத்துக்கு உள்ளது. இதனால், மக்கள் நடந்து செல்லும்போது, அந்த வழியாக ஆம்புலன்ஸ் உட்பட எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும், கிரிவல பாதையில் உள்ள கிராம மக்கள், கிரிவல நாட்களில், வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை உள்ளது.இதனால், 65 கோடி ரூபாய் மதிப்பில், கிரிவல பாதையை விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது. தற்போது, 30 அடி சாலையை, 50 அடியாக அகலப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இந்த பணிக்காக, சாலையோரம் உள்ள மரங்களை அகற்றி வருகின்றனர். முதலில், 50 அடி தார் சாலையாக போடப்பட்ட பின், சாலையின் இருபுறமும் தலா, ஆறு அடி அளவுக்கு மண் சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால், கிரிவலப்பாதை செல்லும் பக்தர்களுக்கு வசதியாகவும், ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனம் மற்றும் கிரிவலப்பாதை பகுதியில் உள்ள கிராம மக்கள் எளிதாக வெளிப்பகுதிக்கு சென்று வரவும் வசதியாகவும் இருக்கும் என, அதிகாரிகள் கூறினர்.