வடிவுடையம்மன் கோவிலில் ரூ.16 லட்சம் உண்டியல் வசூல்
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோவில் உண்டியல் வசூல், 16 லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், பிரபலமான கோவிலாகும். இங்கு, வடிவுடையம்மன் சன்னிதி, வட்டபாறை அம்மன் சன்னிதி என, 20க்கும் மேற்பட்ட சன்னிதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு, சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வர். அந்த கோவிலின் அனைத்து உண்டியல்களின் காணிக்கை பணம், 75 நாட்களுக்கு ஒரு முறை எண்ணப்படும். இரண்டரை மாதம் கழித்து, இரு நாட்களுக்கு முன், கோவில் வளாகத்தில் காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது. இப்பணியில், கோவில் சேவை சங்கத்தினர், 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், 16 லட்சத்து, 8 ஆயிரத்து, 884 ரூபாய் பணமும்; 146 கிராம் தங்கமும்; 320 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.