திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம்
திருமழிசை: திருமழிசை, ஜெகந்நாத பெருமாள் கோவிலில், நேற்று, தேரோட்டம் நடந்தது. வெள்ளவேடு அடுத்த, திருமழிசை, ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம், கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதையடுத்து, ஜெகந்நாத பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில், நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், ஆனி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம், நேற்று காலை நடந்தது. முன்னதாக, கோவிலிருந்து புறப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெகந்நாத பெருமாள், காலை 8:45 மணியளவில், சிறிய தேரில் எழுந்தருளினார். அங்கு, அவருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. பின், பக்தர்கள் காலை 9:00 மணிக்கு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகளில் வலம் வந்த தேர், பின் கோவிலை வந்தடைந்தது. பின், இரவு 7:00 மாடவீதி உற்சவம் நடந்தது.