உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் அருகே பழமையான கல்திட்டைகள் : கோவை தனியார் கல்லூரி ஆய்வில் தகவல்

ஓசூர் அருகே பழமையான கல்திட்டைகள் : கோவை தனியார் கல்லூரி ஆய்வில் தகவல்

ஓசூர்: ஓசூர் அருகே, 5,000 ஆண்டுக்கு முந்தைய மல்லச்சந்திரம் கல்திட்டை பகுதியில், பெருங்கற்காலத்தில் மூன்று கற்கால மனிதர்கள் வீடு கட்டி வசித்ததற்கான கட்டடக் கலை தடயங்கள், அவர்கள் வாழ்க்கை முறை குறித்த கற்கால ஓவியங்கள், பயன்படுத்திய மண்பாண்டங்களை, கோவை தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஓசூர் அடுத்த இம்மிடிநாயக்கன் பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது, மல்லச்சந்திரம் கிராமம். இங்கு, 100க்கும் மேற்பட்ட பழங்கால கல்திட்டைகள் காணப்படுகின்றன. கோவை தனியார் கல்லூரியின் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறை பேராசிரியர் ரவி தலைமையில், 20 மாணவர்கள் கொங்குநாடு வரலாற்று சின்னங்கள் குறித்து கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கோவை மற்றும் ஈரோடு பகுதியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூர் அருகே, சூளகிரி மல்லச்சந்திரம் பகுதியில் காணப்படும் கல்திட்டை பகுதியில், நேற்று தொல்லியல் பேராசிரியர் ரவி மற்றும் மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், 5,000 ஆண்டுக்கு முந்தைய கல்திட்டை பகுதியில் வேட்டை மனிதர்கள், கால்நடை மற்றும் வேளாண் மக்கள், இறுதி கற்கால மனிதர்கள் வசித்ததை கண்டுபிடித்தனர். கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு சிதைந்த மண்பாண்ட பொருட்கள், இரும்பு சிதைவுகளையும் தொல்லியல் பேராசிரியர் ரவி கண்டுபிடித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5,000 ஆண்டுகளுக்கு முன், மனிதர்கள் வாழ்ந்த பல்வேறு தடயங்களை இந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளோம். குறிப்பாக, எகிப்து பிரமிடுகளை போல் பல்வேறு அறைகள் அமைத்து, வேட்டை மனிதர்கள் வசித்த கல்திட்டைகள் மல்லச்சந்திரத்தில் காணப்படுகின்றன. இந்த திட்டை கற்களில், கற்கால மனிதர்களுடைய சிதிலமடைந்த ஓவியங்களை எடுத்துள்ளோம். கற்கால மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடுவது, குழுவாக நடனம் ஆடுவது, விலங்கினங்கள் மற்றும் பல்வேறு புரியாத ஓவியங்கள் உள்ளன. கற்கால மனிதர்களுடைய முரு கற்கள், பழைய கற்கள் ஆகியவை காணப்படுகின்றன. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, பல்வேறு அரிய வகை வரலாற்று சின்னங்கள் இங்கு காணப்படுகின்றன. இந்த சின்னங்கள், பராமரிப்பு இல்லாமல் அழியும் நிலையில் உள்ளன. அதனால், இந்த கல்வெட்டு ஓவியங்கள், கற்கால வீடுகளை மத்திய தொல்லியல் துறை பாதுகாத்து, சுற்றுலா பயணிகளை பார்க்க அனுமதித்தால், அரசுக்கு வருமானமும் கிடைக்கும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சின்னங்களும் அழியாமல் தடுக்கப்படும். இவ்வாறு ரவி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !