நாகை அந்தோணியார் ஆலயத்தில் பெரிய சப்பர பவனி!
ADDED :3431 days ago
நாகப்பட்டினம்: நாகை அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் நடந்த பெரிய சப்பர பவனியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை, கடற்கரை சாலையில் அமைந்துள்ள, பல நுாற்றாண்டுகள் பழமையான அந்தோணியார் தேவாலயத்தில், ஆண்டு திருவிழா, கடந்த, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை மற்றும் தேர்பவனி நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு, கூட்டுப் பாடல் திருப்பலிக்குப் பின், பெரிய சப்பர பவனி நடந்தது. மறை மாவட்ட முதன்மை பாதிரியார் வின்சென்ட் தேவராஜ் மற்றும் பாதிரியார்கள், பெரிய சப்பரத்தை புனிதம் செய்து பவனியை துவக்கி வைத்தனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், புனித லுார்து மாதா மற்றும் அந்தோணியார் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.