உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை நடை 16ம் தேதி திறக்கப்படும்!

சபரிமலை நடை 16ம் தேதி திறக்கப்படும்!

சபரிமலை: புரட்டாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை 16ம் தேதி திறக்கப்படும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து 21ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஓணம் பண்டிகைக்காக 7ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்கள் பக்தர்களுக்கு ஓணம் விருந்து நிகழ்ச்சி நடந்தது. மேலும், சகஸ்ரகலசாபிஷேகம், களபாபிஷேகம் போன்ற சிறப்பு அபிஷேகங்களும், உதயாஸ்தமன பூஜைகளும் நடந்தது. கொட்டும் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் திரண்டனர். ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் முடிந்து, 11ம் தேதி இரவு பத்து மணிக்கு ராக்கால பூஜைக்குப் பின், அய்யப்பனுக்கு விபூதி அபிஷேகம் செய்விக்கப்பட்டு, ஜபமாலை அணிவிக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து, புரட்டாசி மாத பூஜைகளுக்காக நடை வரும் 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறப்பார். அன்றைய தினம் வேறு பூஜைகள் ஏதுமிருக்காது. மறுநாள் அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெறும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, வரும் 21ம் தேதி இரவு பத்து மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி, நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !