பரளி மல்லாண்டார் கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்
குளித்தலை: குளித்தலை அருகே பரளி கிராமத்தில் ஸ்ரீ மல்லாண்டார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.பரளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மல்லாண்டார், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ மதுரை வீரன் ஸ்வாமி, ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ வழிவிடு முருகன், ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பரளி கிராம பொதுமக்கள் கடந்த 8ம் தேதி காலை குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் தீர்த்தகுடம் எடுத்து வந்து சிவாச்சாரியார்கள் மூலம் ஐந்து கால பூஜைகள் செய்யப்பட்டு காலை 6.10 மணிக்கு கலசத்துக்கு புனித நீரை ஊற்றினர். பின்னர் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ராஜேந்திரம் பஞ்சாயத்து தலைவர் பிச்சை, யூனியன் கவுன்சிலர் நளினி கலைமணி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சிவகாமி, கிராம முக்கியஸ்தர்கள் கார்த்திக், முருகானந்தம், பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இளைஞர் மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஸ்வாமியை தரிசனம் செய்தனர்.