திருவிழா கொண்டாடுவதில் பிரச்சனை: 10 ஆண்டாக பூட்டப்பட்ட கோயில் திறப்பு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையால் 10 ஆண்டாக பூட்டப்பட்ட கோயில், கோர்ட் உத்தரவை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் நேற்று திறக்கப்பட்டது. வத்திராயிருப்பு அருகே மீனாட்சிபுரத்தில் சந்தனமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு திருவிழா கொண்டாடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. அவ்வப்போது தகராறு ஏற்பட்டு போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து வந்தனர். அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தும் பிரச்சனை தீரவில்லை. இதனால் 2006ல் அதிகாரிகள் கோயிலை பூட்டினர். அதன் சாவி ஸ்ரீவி., தாசில்தார் பாதுகாப்பில் வைக்கப்பட்டது. ஒருதரப்பினர் ஸ்ரீவி.,மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 10 ஆண்டாக நடந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வெளியானது. அதில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் ஒருதரப்பினரும், ஆனி மாதம் மற்றொரு தரப்பினர் திருவிழா கொண்டாடடி வழிபடவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி ஒருதரப்பினர் இம்மாதம் திருவிழா கொண்டாட முயற்சி செய்தனர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். “கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருப்பதாகவும், அதன் தீர்ப்பு வந்த பிறகுதான் திருவிழா கொண்டாட வேண்டும்” என கூறினர். இதனால் மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. வத்திராயிருப்பு போலீசார் இருதரப்பை சேர்ந்தவர்கள் மீது மீண்டும் வழக்குபதிவு செய்து ஆர்.டி.ஒ., விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பூட்டப்பட்ட கோயிலை திறந்து கோர்ட் உத்தரவை நிறைவேற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தாசில்தார் கண்ணன், வருவாய் துறை அதிகாரிகள் கோயிலை பார்வையிட்டு கோயிலை திறந்தனர். பத்து ஆண்டுகள் ஆகி விட்டதால் தாலுகா அலுவலகத்தில் இருந்த சாவி தொலைந்து விட்டது. இதனால் பணியாளர்கள் பூட்டை உடைத்து கோயிலை திறந்தனர். இதனை தொடர்ந்து அக்கோயில் அறங்காவலர் கணேசனிடம் அதிகாரிகள் கோயில் பொறுப்புகளை ஒப்படைத்து சென்றனர். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.