மணப்பாடு ஆலயத்தில் மகிமைப் பெருவிழா
உடன்குடி : மணப்பாடு திருச்சிலுவை திருத்தலத்தில் மகிமைப் பெருவிழா நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மணப்பாடு திருச்சிலுவை ஆலயம் தென்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இத்திருத்தலத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட உண்மை சிலுவையின் சிறிய பகுதி இருப்பது தனிச் சிறப்பாகும். இச்சிறப்புமிக்க ஆலயத்தில் திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை திருப்பலிகளும், மாலை பங்கு ஆலயத்தில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. நேற்று முன்தினம் மாலை திருச்சிலுவை ஆலயத்தில் மலையாளத்தில் திருப்பலியும், மாலை திருத்தலத்திற்கு ஐந்து திருக்காய சபையின் பவனியும், ஆயர் இவோன் அம்புரோஸ்க்கு திருத்தல மேடையில் வரவேற்பும், மாலை திருநாள் மாலை ஆராதனையும் நடந்தது. இரவு புனித யாகப்பர் ஆலயத்திலிருந்து ஊரின் வீதிகள் வழியே மெய்யான திருச்சிலுவை பவனியும் நடந்தது. திருச்சிலுவை மகிமைப்பெருவிழாவையொட்டி காலை பங்கு ஆலயத்திலும், திருச்சிலுவை ஆலயத்திலும் திருப்பலிகள், மலையாளத்தில் திருப்பலி, திருத்தலத்திற்கு ஐந்து திருக்காய சபையினர் பவனியும் ஆயர் தலைமையில் கூட்டுத்திருப்பலியும் நடந்தது. மாலை பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, கேரளா உட்பட பல பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். மாலையில் கொடியிறக்கம், திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலியும் நடந்தது. இன்று தூய வியாகுல அன்னை திருவிழாவையொட்டி காலை 5.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலியும், காலை 6.30 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலியும் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் தெயோபிலஸ், கிளைட்டன் மற்றும் பங்கு மக்கள் செய்துவருகின்றனர்.