பவானி அம்மன் கோவில் ஆடி திருவிழா இன்று துவக்கம்
திருவள்ளூர்;பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில், ஆடி திருவிழா இன்று துவங்குகிறது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க, அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் பவானி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி திருவிழாவின் போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா, இன்று முதல் துவங்குகிறது. இதையொட்டி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. ஆட்சியர் சுந்தரவல்லி தலைமை வகித்தார். கூட்டத்தில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., விஜயகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் ஜெயச்சந்திரன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ஆட்சியர், பக்தர்கள் தங்குவதற்கும், குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்; வாகனங்கள் நிறுத்த தனியிடம் அமைத்து, நெரிசல் ஏற்படாமல் தடுக்க வேண்டும்; மருத்துவ வசதி, தடையில்லா மின்சாரம், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.