உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புராணங்களில் தேடுங்கள் அறிவியலை!

புராணங்களில் தேடுங்கள் அறிவியலை!

புதியவைகள் கண்டுபிடிக்க வேண்டுமெனில் கனவு காணுங்கள் என்றார், நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். கனவு காண்பதன் அடிப்படையே கற்பனையில் பிறப்பதுதானே. நமது புராணங்களும் இதிகாசங்களும் வெறும் கற்பனையில் தோன்றியதுதானே என சிலர் வாதிடுவதுண்டு. அவைகள் வெறும் கற்பனைகளாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே. ஆனால் புராணங்களிலும் நமது தமிழ் இலக்கியங்களிலும் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளைக் காணும் போது பெரும் வியப்பு மேலிடுகிறதே! எங்கேயோ நடக்கும் கிரிக்கெட் போட்டி, கோயில் கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளை தொலைக்காட்சிகள் இன்று நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. இந்த விஞ்ஞான வினோதத்தை வீட்டிற்குள் இருந்தபடியே நாமும் அனுபவித்து வருகிறோம். நேரடி ஒளிபரப்பு நிகழ்வதைப் போன்ற காட்சியை நமது புராணங்களும் சொல்லியிருக்கின்றன. சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இமய மலையில் உள்ள கைலாயத்தில் திருமணம் நடக்கிறது. அந்தத் திருமணத்தை அகத்திய முனிவர் பொதிகை மலையில் இருந்தபடியே பார்த்துப் பரவசப்பட்டாராம். வட கோடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியை தென் கோடியில் இருந்து ஒருவர் உடனுக்குடன் கண்டதும், உள்ளம் களிப்படைந்ததும் நேரடி ஒளிபரப்பு போன்றது அல்லாமல் வேறென்ன?

வயர்ெலஸ் தொடர்புகள் : ஆதிரை என்பவளின் கணவன் சாதுவன் வியாபாரம் நிமித்தமாக நண்பர்களுடன் சேர்ந்து கடல் பயணம் மேற்கொள்கிறான். திடீரென்று கப்பல் மூழ்கி விடுகிறது. ஆபத்திலிருந்து தப்பித்த சாதுவன், நாகர்கள் என்ற ஆதிவாசிகள் வசிக்கும் ஒரு தீவில் கரையேறுகிறான். சாதுவனைப் போலவே ஆபத்திலிருந்து தப்பித்த அவனது நண்பர்களில் சிலர் ஊர் திரும்புகின்றனர். சாதுவன் மூழ்கி விட்டதாக ஆதிரையிடம் தெரிவிக்கின்றனர். கணவர் இறந்தபின் தான் மட்டும் வாழ்ந்து என்ன பயன் என்று ஆதிரை தீக்குளிக்க முயல்கிறாள். அப்போது வானத்திலிருந்து ஒரு அசரீரி கேட்கிறது. உன் கணவன் சாகவில்லை பத்திரமாக திரும்பிக் கொண்டிருக்கிறான் என்கிறது அக்குரல். அந்த வார்த்தையை நம்பி ஆதிரை தீக்குளிப்பதை நிறுத்துகிறாள். சாதுவனும் உயிருடன் திரும்புகிறான். இந்த அசரீரியின் வாக்கு எந்த தொடர்பும் இல்லாமல் ஒருவர் மற்றவருடன் உரையாட முடியும் என்கிற உண்மையை உள்ளடக்கியதாகவே தென்படுகிறது. இக்கதை, வயர்லெஸ் கருவிகள் வழியாக இன்று நாம் பேசிக் கொள்வதற்கும் எந்த விதக் கம்பித் தொடர்புமே இல்லாமல் அன்று அசரீரியின் குரலை ஆதிரை கேட்டு ஆறுதல் அடைந்ததற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

அணுஆற்றல் :
அணுவைப் பிளக்க முடியும், அதன் மூலம் ஆற்றலைப் பெற முடியும் என்கிற கருத்தெல்லாம் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் காலத்திற்குப் பின்னரே உலகின் வலுப்பெற்றது. ஆனால் தமிழ் மூதாட்டி அவ்வையார் அணுவைத் துளைத்து எழு கடலைப் புகட்டி என்று பாடி அணுவைத் துளைக்க முடியும் அதைப் பிளக்கவும் முடியும் என்கிற உண்மைகளை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புட்டு புட்டு வைத்து விட்டாரே.அணுகுறித்த மேலும் ஒரு வியப்பூட்டும் தகவலும் நமக்குக் கிடைத்திருக்கிறது. மகாபாரதச் சண்டை நடந்த இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதிசயம் என்னவென்றால், அந்த இடத்தில் இப்போதும் கூட கதிரியக்கம் இருக்கிறதாம். கதிரியக்கம் வெளிப்படுவதால் அணு ஆயுதங்கள் போன்ற சண்டைக் கருவிகள் மகாபாரத யுத்தத்திலும் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் எனவும் யூகிக்கப்படுகிறது.

வான்வெளி பயணம் : ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடத்திற்கு ராமரும், லட்சுமணனும் வருகிறார்கள். அங்கே தேர்ச்சக்கரங்களின் தடம் மட்டுமே தென்படுகிறது. தடம் போகும் திசையில் இருவரும் நடக்கிறார்கள். சிறிது துாரத்தில் தடம் மறைந்து விடுகிறது. அப்படியானால் தேர் என்னவாயிற்று? ஒன்று பூமிக்குள் புதைந்திருக்க வேண்டும் அல்லது வானத்தில் பறந்திருக்க வேண்டும். ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றது ஊர்ஜிதமாகி விட்டதால், தேர் பூமிக்குள் புதைய வாய்ப்பேயில்லை. வான் வெளிப்பயணம் மட்டும்தான் ஒரே வழி. அப்படியானால் சிறிது துாரம் ஓடி, பின் மேலெழும்புகிற மாதிரியான வடிவமைப்புடன் ராவணனின் தேர் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே ரன்வேயில் ஓடி பின் டேக் ஆப் ஆகிற தற்கால விமானங்களுக்கு முன்னோடியாக ராவணனின் தேர் இருந்திருக்கிறது. சீவக சிந்தாமணியில் உலவும் கதாபாத்திரமான ச்சந்தன் ஆபத்துக் காலத்தில் தப்பிப்பதற்காக தனது மனைவிக்கு மயில் பொறி என்னும் வாகனத்தைப் பரிசளிக்கிறான். ஹெலிகாப்டரைப் போலவே அந்த மயில்பொறியும் நின்ற இடத்திலிருந்து ஜிவ்வென்று வானத்தில் எழும்பும் இயக்கத்தைப் பெற்றதுதானாம்.

கண் மருத்துவம் : உலகில் முதல் கண் மருத்துவர் யார் தெரியுமா? சாட்சாத் கண்ணப்ப நாயக்கனார்தான். அவர்தான் முதன் முதலில் கண் மாற்றும் அறுவைச் சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர். கண்ணப்ப நாயனார் சிவபெருமானின் தீவிர தொண்டர். சிவனுக்கு தொண்டு செய்வதையே பெரும் பாக்கியமாக கருதுபவர். ஒருநாள் சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்த்து விடுகிறார். நெஞ்சம் பதறி விடுகிறார். செய்வதறியாது நின்ற கண்ணப்பரின் மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது. தனது கண்களைப் பிடுங்கி எடுத்து சிவபெருமானின் முகத்தில் ஒட்டுகிறார். உடனே விக்கிரகத்தில் ரத்தம் வழிவது நின்று விடுகிறது. முதல் கண் மாற்று அறுவைச் சிகிச்சை பற்றிய இந்த செய்தி கண்ணப்ப நாயனார் புராணத்தில் வருகிறது.

அண்டங்கள் : பல்வேறு புராணங்களும் வெளிப்படுத்துகின்ற ஒரு தகவல், வான் வெளியில் 1008 கோடி அண்டங்கள் உள்ளது என்பதுதான். விஞ்ஞானி கலிலியோ காலத்தின் பின்பே வான்வெளி ஆய்வுகள் உலகில் தீவிரப்படுத்தப்பட்டன. டெலஸ்கோப், செயற்கைக்கோள் இன்றி அன்றே எப்படி அண்டங்களைப் பற்றி ஆராய்ந்தார்கள் என்பது புதிர். பூலோக மனிதர்கள் வானுலகம் சென்றதாகவும் வானுலகத் தேவர்கள் பூலோகம் வந்ததாகவும் புராணங்கள் கூறுவதை நம்பும்படியாகவா உள்ளது என்று கேட்கலாம். இன்று நிலவில் காலடி வைத்து விட்டானே மனிதன்? செவ்வாய்க் கிரகம் செல்வதற்கும் முயற்சி எடுத்து விட்டானே? புராணங்களில் வரும் செய்திகள் எல்லாம் உண்மையாகி வருவதைப் பார்த்தால், பூலோக மனிதரும், வானுலகப் பிறவிகளும் சந்தித்துக் கொள்ளும் நிலை வரலாம். புராணங்களில் தேடுங்கள் அறிவியலை! அவற்றில் பல அற்புதங்களுக்கு விடையும், வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

-எல். பிரைட்,எழுத்தாளர்
தேவகோட்டை, 9698057309


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !