பவானி சங்கமேஸ்வரர் கோவில் ஏலம் முடிவுக்கு வந்தது :அதிகாரிகள் நிம்மதி
பவானி: இழுத்தடித்து வந்த, ஏலம் முடிவுக்கு வந்ததால், பவானி கோவில் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். பவானி, சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பிரசாத விற்பனை செய்யும் உரிமம், சமய புத்தக விற்பனை, கூடுதுறை பகுதியில் தேங்காய், பழம், பூஜை சாமன்கள் விற்பனை செய்யும் உரிமம், முடி சேகரம் செய்து கொள்ளும் உரிமம், கோட்டை விநாயகர் கோவில் முன் பக்தர்கள் உடைக்கும் சிதறு தேங்காய் சேகரிப்பு உள்ளிட்டவற்றுக்கான ஏலம் ஆண்டு தோறும் நடக்கும். நடப்பாண்டுக்கான ஏலம், பல முறை நடத்தப்பட்டது. முதல் ஏலத்தில், சிதறு தேங்காய் சேகரிக்கும் உரிமம், தென்னை மர மகசூல் உரிமம் மட்டுமே ஏலம் போனது. இரண்டாவது முறை, முடி சேகரிக்கும் உரிமைக்கான ஏலம் மட்டும் விடப்பட்டது. மூன்றாவது முறையும், முக்கியமாக கருதப்படும் பிரசாத கடை, சமய நூல்கள் விற்பனை செய்யும் உரிமம், பரிகார பூஜை பொருட்கள் விற்பனை உரிமத்துக்கு ஏலதாரர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நான்காவது முறையாக, ஏலம் நேற்று நடந்தது. இதிலும் ஏலதாரர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு வழியாக, பிரசாத ஸ்டால் விற்பனை உரிமம், 11.56 லட்ச ரூபாய்க்கும், சமய நூல் விற்பனை செய்யும் உரிமம், 3.90 லட்சத்துக்கும், கூடுதுறை பகுதியில் பரிகார பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம், 46 லட்ச ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த ஆண்டு, கூடுதுறை கோவில் பரிகார பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம், 52 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. நடப்பாண்டு, 46 லட்சத்துக்கே போயுள்ளது. ஆனாலும் பல முறை ஒத்தி வைக்கப்பட்ட ஏலம், ஒருவழியாக முடிவுக்கு வந்ததில், கோவில் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.