உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் காலி பணியிடம் திருப்பணி பாதிப்பு என புகார்

கோவில்களில் காலி பணியிடம் திருப்பணி பாதிப்பு என புகார்

அன்னுார்: கோவை புறநகரில் கோவில் செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், திருப்பணிகளில் பாதிப்பு என புகார் எழுந்துள்ளது. ’மேற்றலை தஞ்சாவூர்’ என்றழைக்கப்படும் 1,000 ஆண்டுகள் பழமையான அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலின் செயல் அலுவலர் சில மாதங்களுக்கு முன் மாற்றப்பட்டார். இதுவரை புதிய செயல் அலுவலர் நியமிக்கப்படவில்லை. அதே போல் பிரசித்தி பெற்ற குமரன்குன்று கோவில் செயல் அலுவலர் மாற்றப்பட்டுபல மாதங்களாகியும் இன்னும் புதிய செயல் அலுவலர் நியமிக்கப்படவில்லை. மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவில் செயல் அலுவலர் சந்திரமோகன், கூடுதல் பொறுப்பாக அன்னுார், மற்றும் குமரன் குன்று கோவில்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் முடிந்து விட்டது. எனவே, இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். சின்னம்மன், பெரியம்மன் கோவில் திருப்பணியில், வழக்குகளால் சிக்கல் ஏற்பட்டு, பணி மெத்தனமாகியுள்ளது. மாரியம்மன் கோவிலில், இரு ஆண்டுகளாக பூச்சாட்டு திருவிழாவே நடக்கவில்லை. இத்துடன் அன்னுாரில் உபகோவில்கள் கஞ்சப்பள்ளி, காட்டம்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ளன. மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பல கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம் கட்டும் பணி துவங்க உள்ளது. அந்த கோவில் செயல் அலுவலர் அன்னுார் மற்றும் குமரன்குன்றுக்கு கூடுதல் பொறுப்பாக உள்ளதால், திருப்பணி, திருவிழாக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !