உத்தரவை மீறி திருப்பணிகள் : அறநிலைய துறைக்கு எச்சரிக்கை
’தமிழகத்தில் பல கோவில்களில், நீதிமன்ற உத்தரவை மீறி திருப்பணிகள் நடக்கின்றன. அப்பணிகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்’ என, அறநிலையத் துறைக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. திருப்பணி என்ற பெயரில் கோவில்களின் பாரம்பரியத்தையும், கலாசார தொன்மையையும் சீர்குலைக்கும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆலய வழிபடுவோர் சங்கம் மற்றும் தன்னார்வலர் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை ஒருங்கிணைத்து ஒரே வழக்காக, நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஜூலை, 5ல், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ’கோவில்களில் கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தால் மட்டுமே திருப்பணிகளை நடத்த வேண்டும்; அதுவும் பழமை மாறாமல் மேற்கொள்ள வேண்டும்’ என, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி பல கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில கோவில்களில் பழமையான கட்டடங்களை முழுவதும் அகற்றி மீண்டும் கட்டப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், நரசிம்மர் சன்னிதி; திருகோஷ்டியூர் சிவன்கோவில், விநாயகர் சன்னிதி; திரு வெள்ளாரை ராமானுஜர் சன்னிதி; ஸ்ரீரங்கம் உள் ஆண்டாள் சன்னிதி, சிறுபுட்டுக்குழி விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் திருப்பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது. அறநிலையத்துறை மீது ஏற்கனவே வழக்கு தொடர்ந்த, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் அறநிலையத்துறை கமிஷனர் வீரசண்முக மணிக்கு இ - மெயில் மூலம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ’நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி திருப்பணி என்ற பெயரில், பழமையான கோவில் கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன; இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் அவமதிப்பு தொடர்பாக வழக்கு தொடரப்படும்’ என, தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அறநிலையத்துறை துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். - நமது நிருபர் -