திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் ஆடிப்பூரம் துவக்கம்
ADDED :3400 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், திருவாடிப்பூரம் இன்று துவங்கியது. இன்று துவங்கி, வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. சூடி கொடுத்த நாச்சியார் என்று பெருமையுடன் அழைக்கப்படும் ஆண்டாளை வழிபடும், திருவாடிப்பூர விழா, திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், கோலாகலமாக துவங்கியது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வீரராகவர் கோவிலில், ஆடி மாதத்தில் ஆண்டாளை வழிபட்டு, நடைபெறும் ஆடிப்பூரம் சிறப்பானதாக கருதப்படுகிறது. இதையடுத்து, ஆண்டாள் சன்னிதியில், திருமஞ்சனம், இன்று, காலை 9:30 மணிக்கு நடைபெற்றது. இன்று முதல், வரும் 31ம் தேதி வரை, தினமும் மாலை 5:30 மணிக்கு ஆண்டாள் மாடவீதி புறப்பாடும், தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.