உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை விழா: சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள்!

ஆடி அமாவாசை விழா: சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள்!

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில், பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று, பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது.

விழாவிற்காக, 28ம் தேதி முதல் மலைப்பாதை திறந்து விடப்பட்டாலும், அன்று பெய்த கனமழையால் மலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. போலீசார் மலைக்கு செல்ல தடை விதித்ததால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் மழை நின்று, ஆறுகளில் வெள்ளம் வடிந்ததை அடுத்து, 30ம் தேதி தடை விலக்கி கொள்ளப்பட்டது. இதையடுத்து, நேற்று ஞாயிறு விடுமுறையாக இருந்ததாலும், ஆடி அமாவாசை திருவிழா நேற்று துவங்கியதாலும், அதிகாலையே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். பக்தர்களின் கூட்டம் மலைப்பாதையை நிரப்பியது. இதனால், திருவிழா வழக்கம்போல களைகட்ட துவங்கியது. சிறப்பு பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. மலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை கருப்பசாமி கோவிலில் வழிபட்டு திரும்பினர். இன்று சிவராத்திரி தினமாக உள்ளதால், பக்தர்களின் வருகை அதிகரிக்கக்கூடும் என்பதால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !