4 கிராமங்களில் தீ மிதி திருவிழா
ஊத்துக்கோட்டை: நான்கு கிராமங்களில் நடந்த தீமிதி திருவிழாவில், 500க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி தீ மிதித்தனர். எல்லாபுரம் ஒன்றியம், சூளைமேனி கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலில், நான்காம் ஆண்டு தீமிதி திருவிழா, கடந்த, 22ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பின், ஒவ்வொரு நாளும், தீச்சட்டி ஏந்துதல், தாய்வீட்டு சீர்எடுத்து வருதல், முளைப்பாரி ஏந்துதல், நாக்கில் அலகு போடுதல், பால்குடம் எடுத்தல், திருவிளக்கு பூஜை, சறுக்கு மரம் ஏறுதல், அலகு பானை நிறுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம், தீமிதி திருவிழா நடந்தது. இதில், 256 பேர் காப்பு கட்டி தீமிதித்தனர். தாராட்சி கிராமத்தில், கடந்த, 22ம் தேதி, தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பின், ஒவ்வொரு நாளும், திருக்கல்யாணம், நஞ்சுக்குழி யாகம், அரக்குமாகோட்டை, அர்ச்சுனன் தபசு, தர்மராஜா ஊர்வலம், மாட்டுப்புடி சண்டை, படுகளம் ஆகிய நிகழ்ச்சிகளும், நேற்று முன்தினம், தீமிதி திருவிழாவும் நடந்தன. இதில், 110 பேர் காப்பு கட்டி தீ மிதித்தனர். தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், பூண்டி ஒன்றியம், ஆட்ரம்பாக்கம், ரங்காவரம் கிராமத்திலும் தீமிதி திருவிழாவிலும், 150க்கும் மேற்பட்டோர், காப்பு கட்டி தீ மிதித்தனர்.