திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சிக்கு குவிந்தது கூட்டம்
திருவொற்றியூர்: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவிலில் நடந்த விசேஷ ஹோமங்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தெற்கு முகமாக அமைந்திக்க வேண்டிய தட்சிணாமூர்த்தி, திருவொற்றியூரில் வடக்கு முகம் பார்த்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதுவே இக்கோவிலின் தனிச்சிறப்பு. திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் இக்கோவில் வட குருஸ்தலமாகும். தட்சிணாமூர்த்திகளில் வேதா, வீணா, யோகா என பலவகைகள் உண்டு. இங்கு அவர் யோகா தட்சிணாமூர்த்தியாக 10 அடியில் பிரம்மாண்டமாக ஸ்தாபனம் செய்யப் பட்டுள்ளார். இத்திருக்கோவிலில் ஆதிசங்கரர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு, இக்கோவிலில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் லட்சார்ச்சனை நடைபெற்றது. குருபெயர்ச்சி நிகழ்வான நேற்று, காலை 5:00 மணி முதல் கணபதி ஹோமம், குருபெயர்ச்சி பரிகார ஹோமம், 108 மூலிகைகள் மற்றும் ஹோம திரவியங்கள் கலந்த கலச நீரில் விஷேச அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. திருவொற்றியூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் குவிந்திருந்தனர். இன்று காலை ருத்ராபிஷேகம், லட்சார்ச்சனை நடைபெறும்.