உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புல்லூர் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா : தமிழகம், ஆந்திரா பக்தர்கள் திரண்டனர்

புல்லூர் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா : தமிழகம், ஆந்திரா பக்தர்கள் திரண்டனர்

வேலுார்: வாணியம்பாடி அருகே புல்லுார் கனக நாச்சியம்மன் கோவிலில், நேற்று ஆடிப்பெருக்கு விழா நடந்தது. இதில், தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேலுார் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையில், புல்லுார் பாலாற்று பகுதியில் கனக நாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இதை, கடந்த 50 ஆண்டுகளாக, தமிழக மக்கள் பராமரித்து வந்தனர். பின், இந்த கோவில் தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது.

சிறப்பு பூஜை : இங்கு, வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து, தமிழக கிராம மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். அத்தோடு, ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், ஆடிப்பெருக்கு விழாவை கோலாகலமாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில், சித்துார் மாவட்டம் குப்பம் மண்டலம் கங்குந்தி ஊராட்சி பெரும்பள்ளம் கிராம எல்லைக்குள் கனக நாச்சியம்மன் கோவில் இருப்பதாகக் கூறி, சமீபத்தில் ஆந்திர மாநில அரசின் அறநிலையத்துறை அதிகாரிகள், இந்த கோவிலை அதிரடியாக கைப்பற்றினர். இதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதை கொஞ்சமும் கண்டு கொள்ளாத ஆந்திர அரசு, கோவிலுக்கு மின் இணைப்பு வழங்கியதோடு, போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்தது. இதற்கிடையே, ஆண்டுதோறும் நடக்கும் ஆடிப்பெருக்கு விழா, இந்த ஆண்டு நடக்குமா? என்ற கேள்வி தமிழக மக்கள் இடையே எழுந்தது.

ஆந்திர அரசு : இந்நிலையில், இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவை, ஆந்திர அரசே நடத்துவதாக அறிவிப்பு வெளியானது. இதுதொடர்பாக, தமிழில் நோட்டீஸ் அச்சிட்டு வினியோகித்த ஆந்திர அரசு, ஆடிப்பெருக்கு விழாவில் தமிழக மக்களும் திரளாக பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, கனக நாச்சியம்மன் கோவிலில் நேற்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடந்தது. அதிகாலை, 3:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 5:00 மணிக்கு, தீப ஆராதனையும், பல்வேறு பூஜைகளும் நடந்தன.

தடுப்பணையில் படகு விட முடிவு : பாலாற்றின் குறுக்கே புல்லுாரில் ஆந்திர அரசு கட்டிய தடுப்பணை, சமீபத்தில், 5 அடியிலிருந்து, 12 அடியாக உயர்த்தி கட்டப்பட்டது. மேலும், தரையில் இருந்து, 5 அடி பள்ளமும் தோண்டப்பட்டுள்ளது. இதனால், அங்கு, 17 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. இதைத்தொடர்ந்து, தடுப்பணை அருகே படகு குழாம் அமைக்க, ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, கடந்த 2 நாட்களாக தடுப்பணையில் பரிசல் சவாரிக்கான வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதற்கு, 50 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பங்கேற்காதது ஏன்? : கனக நாச்சியம்மன் கோவிலில் நேற்று நடந்த ஆடிப்பெருக்கு விழாவில், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பதாக, அதற்கான அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர் நேற்றைய விழாவில் பங்கேற்கவில்லை இதுகுறித்து விசாரித்தபோது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, ஆந்திராவில், நேற்று பந்த் நடத்த ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால், ஏற்கனவே திட்டமிட்டபடி, கனக நாச்சியம்மன் கோவில் ஆடிப்பெருக்கு விழாவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்ள முடியவில்லை என்று, அம்மாநில அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !