உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதம் படித்தால் உலகை படிப்பதற்கு சமம்

வேதம் படித்தால் உலகை படிப்பதற்கு சமம்

சென்னை: இந்து தர்மத்தில் தாழ்த்தப்பட்டவர், உயர்த்தப்பட்டவர் என்ற பாகுபாடு கிடையாது. இந்து மதம் யாருக்கும் எதிரானது அல்ல. நம் வாழ்க்கை முறையே சேவையை அடிப்படையாக கொண்டது, என, இந்து ஆன்மிக கண்காட்சியை துவக்கி வைத்து, பாபா ராம்தேவ் கூறினார். அறநெறி, கலாசார பயிற்சிக்கான முனைப்பு நிறுவனமும், இந்து ஆன்மிக சேவை நிறுவனமும் இணைந்து, ஆண்டுதோறும் இந்து ஆன்மிக சேவை கண்காட்சியை நடத்தி வருகின்றன. இந்தாண்டு, எட்டாவது கண்காட்சி, நேற்று துவங்கியது. ஆக., 8ம் தேதி வரை சென்னை, மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லுாரியில் நடக்கிறது.

பெண்மையை... சுற்றுச்சூழலை பராமரித்தல்; பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல்; பெண்மையை போற்றுதல்; எல்லா ஜீவராசிகளையும் பேணுதல்; நாட்டுப்பற்றை உணர்த்துதல்; வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் என, ஆறு கருத்துக்களை முன்வைத்து, இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. கண்காட்சி துவக்க விழாவை முன்னிட்டு, நேற்று மாலை கங்கா, காவேரி மங்கல தீர்த்த கலச யாத்திரை நடந்தது. ஆன்மிக கண்காட்சியை, யோகா குரு பாபா ராம்தேவ் துவக்கி வைத்து, பேசியதாவது: இந்து மதம் யாருக்கும் எதிரானது அல்ல. நம் வாழ்க்கை முறையே சேவையை அடிப்படையாக கொண்டது. நாம் யாரிடமும் சேவையை கற்றுக்கொள்ளும் அவசியம் இல்லை. மற்றவர்களுக்கு சேவையை கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. நான் வேதம் தான் படித்துள்ளேன். ஆனால், என்னிடம், பல தொழில் அதிபர்கள், நிர்வாக திறன் குறித்து கேட்கின்றனர். எனவே, வேதம் படித்தால், உலகை படிப்பதற்கு சமம்.

பாகுபாடு இல்லை : காலில் அடிபட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது. எந்த உறுப்பை பிரிந்தும், நாம் வாழ முடியாது. அதேபோல, இந்து தர்மத்தில் யாரும் தாழ்த்தப் பட்டவர், உயர்த்தப்பட்டவர் என்ற பாகுபாடு கிடையாது. நம் சமுதாயமே, ஒரு உடல் போலத்தான் செயல்படுகிறது. நமது முன்னோர் முனிவர், ரிஷிகளாக இருந்துள்ளனர். எனவே, அனைத்து பாரம்பரியத்தையும் மதிக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்ல விரும்புவோம். தினமும், 10 நிமிடம் யோகா பயிற்சி எடுத்துக் கொண்டால், உடல் நலமுடன் இருக்கும். மூச்சுப் பிரச்னையில் இருந்து விடுபடலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். இவ்வாறு அவர் பேசினார். கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக, சீக்கிய மதத்தை சேர்ந்த கியானி இக்பால் சிங், பவுத்த மதத்தை சேர்ந்த பேராசிரியர் கேஷே நவாங் சாம்டன், சமண மதத்தை சேர்ந்த வீரேந்திரா ஹெக்டே ஆகியோர் பங்கேற்று பேசினர். விழாவில், பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியன் வரவேற்றார். டி.வி.எஸ்., குழுமத்தை சேர்ந்த கோபால் ஸ்ரீனிவாசன் கருத்துரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !