ஹோலி கொண்டாட்டம் ஜாலி வண்ணங்களுடன் வந்த ‘வசந்தம்’
திருப்பூர்: வட இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலிப் பண்டிகை, திருப்பூர் உட்பட பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
வடமாநில மக்களின் வசந்த விழாவாகக் கருதப்படும் ஹோலிப் பண்டிகை நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருப்பூரில் மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், ஓடக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் வடமாநிலத்தினர், தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர். அதில், ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை துாவியும், பூசியும் உற்சாகமாக கொண்டாடினர். குழந்தை முதல் பெரியவர் வரை, வயது வித்தியாசம் பார்க்காமல், சிறு குழந்தைகள் போல் வண்ணப் பொடிகள் கலந்த தண்ணீரை ஊற்றி, நடனமாடி கொண்டாடினர். திருப்பூர், அவிநாசி ரோட்டில் உள்ள பிரைம் அபார்ட்மென்ட்டில் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சியுடன் ஹோலியை உற்சாகமாக வரவேற்று கொண்டாடினர். வண்ணப்பொடிகளை துாவியபடி கொண்டாடினர். இதனால், அபார்ட்மென்ட் முழுவதும் வண்ணமயமாக காட்சியளித்தது. ஈஸ்வரன் கோவில் வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வட மாநில வாலிபர்கள் உடலில் வண்ணப்பொடிகளை பூசியபடி டூவீலர்களில் வலம் வந்து ஹோலி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதேபோல், மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.