உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மாப்பேட்டையில் ஆடிப்பெருக்கு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

அம்மாப்பேட்டையில் ஆடிப்பெருக்கு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

அரூர்: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, டி.அம்மாப்பேட்டை சென்னியம்மன் கோவில் மற்றும் ஒகேனக்கல்லில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்பெண்ணையாற்றின் கரையோரம் சென்னியம்மன் கோவில் உள்ளது. 30,000 பக்தர்கள்: தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய, மூன்று மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஆடி மாதத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நேற்று இந்த கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து, 30,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர்.

சிறப்பு பஸ்கள் இயக்கம்: பக்தர்கள் ஆற்றில் புனித நீராடி, பாறைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை செய்து வணங்கினர். பின்னர் ஆடு, கோழிகளை பலியிட்டு அங்கேயே சமைத்து, தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிமாறினர். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஆற்றில் தண்ணீர் செல்வதால், பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். விழாவில், அரூர் ஆர்.டி.ஓ.,கவிதா, தாசில்தார் விஜயா உட்பட பலர் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு, அரூர், ஊத்தங்கரையிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

ஒகேனக்கல்லில் குவிந்தனர்: ஆடி பெருக்கையொட்டி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில், 20,000க்கும் மேற்பட்டோர் நேற்று குவிந்தனர். அதிகாலை, 4 மணி முதலே காவிரி ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின் கோவில்களில் வழிபாடு செய்தனர். புதுமண தம்பதிகள் தங்கள் தாலி கயிறை மாற்றிக் கொண்டு சிறப்பு பூஜை செய்தனர். ஆடிப்பெருக்கையொட்டி, பென்னாகரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் ஒகேனக்கலுக்கு இயக்கப்பட்டன. கூட்ட நெரிசல் காரணமாக, 2 கி.மீ.,க்கு முன்பாகவே வாகனங்கள் நிறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !