ராமநாதசுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :3397 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பர்வதவர்த்தினி அம்மன் திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோயிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதற்காக திருக்கோயிலில் இருந்து காலை 10 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகினார். தொடர்ந்து வேதமந்திரங்கள் ஒலிக்க அம்மனுக்கு கோயில் குருக்கள் தீபாராதனை காண்பித்தனர். இதையடுத்து அம்மன் தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரில் வலம்வந்த அம்மனை தரிசிக்க வீதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 12ம் தேதி முடிய விழா தொடர்ந்து நடக்கிறது.