திருவொற்றியூர் கோவில் முகப்பில் செருப்பு: பக்தர்கள் வெறுப்பு
திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலின் முகப்பில், வரைமுறை இல்லாமல் செருப்புகள் போடப்படுவது, பக்தர்களை வெறுப்புக்கும், வேதனைக்கும் உள்ளாக்கி வருகிறது. திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோவில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், ஆதிசங்கரர் வழிப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இத்தனை சிறப்பு பெற்ற இக்கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் செருப்பு பாதுகாப்பு மையம். கோவில் குளக்கரை அருகே செயல்பட்டு வருகிறது. ஆனால், கோவிலின் முகப்பு முன்பே, செருப்புகளை பலர் கழற்றி விட்டுச் செல்கின்றனர். காலணிகள், மலை போல குவிந்து விடுகின்றன. அங்கு செருப்பைப் போடக்கூடாது என்று காவலர்கள் சொன்னாலும் பலர் கேட்பதில்லை. வேறு எந்தக் கோவிலிலும் இப்படி முகப்பில் காலணிகள் போடப்படுவதில்லை. இதனால், ஆன்மிகவாதிகள் மட்டுமின்றி, வெளியூரிலிருந்து இங்கு வரும் பக்தர்களும், இந்த காட்சியைப் பார்த்து, வேதனைப்படுகின்றனர். செருப்பு பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டியது, கோவில் நிர்வாகத்தின் பொறுப்பு.