திருநாகேஸ்வரம் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.13 லட்சம் காணிக்கை!
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.13 லட்சம் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டுள்ள ராகுபகவானுக்கு ராகுகாலத்தில் பாலாபிஷேகம் வழிபடுவது சிறப்பு. சிறப்புமிக்க இவ்வாலயத்தில் கடந்த மே மாதம் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. கோவிலில் உள்ள மொத்தம் 13 உண்டியல்களில் கடந்த 7ம் தேதி எட்டு உண்டியல் திறக்கப்பட்டது. அப்போது அதில் ரொக்கமாக ஏழு லட்சத்து 48 ஆயிரத்து 366 ரூபாயும், தங்கமாக 68 கிராமும், வெள்ளியாக இரண்டரை கிலோவும் பக்தர்கள் செலுத்தியிருந்தனர். தொடர்ந்து நேற்று பாக்கி உள்ள ஐந்து உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில், ரொக்கமாக ரூபாய் 3 லட்சத்து 62 ஆயிரத்து 817ம், தங்கமாக 29 கிராமும், வெள்ளி ஒரு கிலோவும் பக்தர்கள் செலுத்தியிருந்தனர். மொத்தமாக உண்டியல் மூலம் 13 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை வருவாய் கிடைத்துள்ளது. இரண்டு முறை உண்டியல் திறப்பின்போதும் மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர் புகழேந்தி, கும்பகோணம் உதவி ஆணையர் தென்னரசு, கோவில் உதவி ஆணையர் மோகனசுந்தரம், திருவிடைமருதூர் ஆய்வாளர் கண்ணன், கோவில் கண்காணிப்பாளர்கள் ரேணுகா, திருநாவுக்கரசு மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.