வரலட்சுமி விரத மகிமைகள்!
தேவலோகத்தில் சித்ரநேமி என்றொரு தேவதை இருந்தாள். இவள் தேவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்ப்பு சொல்லும் நீதிபதி. ஒருமுறை, இந்த தேவதை பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியதன் காரணமாக அன்னை பார்வதிதேவியின் கோபத்துக்கு ஆளாகி, சாபம் பெற்றாள். அவள் தனது தவற்றை உணர்ந்து பார்வதிதேவியிடம் மன்னிப்புக் கோரியதுடன், தான் பெற்ற சாபத்துக்கான விமோசனத்தையும் கேட்டாள். அவளிடம், வரலட்சுமி விரதம் இருந்து அலைமகளை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று உரைத்தார் பார்வதிதேவியார். அதன்படி, சித்ரநேமி ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து உரிய நியதிப்படி வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்து சாபவிமோசனம் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆக, பணியிலோ, குடும்பத்திலோ நடுநிலை தவறி அதனால் மன உளைச்சலில் இருப்பவர்கள், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து திருமகளை வழிபடுவதன் மூலம், மன பாரம் நீங்கப் பெறலாம் என்பது அனுபவ உண்மை.
பூலோகத்தில் பத்ரச்ரவஸ் என்ற மன்னன் இருந்தான். இவன் சிறந்த விஷ்ணு பக்தன். இவனுடைய செல்வமகளான சியாமபாலா, வரலட்சுமி விரதம் இருந்து, மங்களமான வாழ்க்கையைப் பெற்றிருந்தாள். அத்துடன் தன் பெற்றோருக்கும் இந்த விரத மகிமையைக்கூறி அவர்களையும் வாழவைத்தாள். வரலட்சுமி விரத தினத்தில் இந்தக் கதையைப் படிப்பதும், கேட்பதும் விசேஷமான பலன்களைப் பெற்றுத் தரும்.
வரலட்சுமி விரத நாளில் புண்ணிய நீராடுவது உயர்வான விஷயம். இதன் மூலம், வருடம் முழுவதும் ஏழு புண்ணிய நதிகளில் நீராடிய பலன்கள் கிடைக்கும் என்பர் பெரியோர். திருமணம் ஆகாத பெண்கள் இந்த பூஜையில் கலந்துகொண்டு மஞ்சள் சரடை கையில் கட்டிக்கொண்டால் மனதுக்குப் பிடித்த கணவன் அமைவான்; எதிர்காலம் வளமாக அமையும். சுமங்கலிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், வீட்டில் சுபிட்சம் நிலவும்; மாங்கல்ய பலம் அதிகரிக்கும். புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண்ணானவள், கணவனின் உறவினர்களை தன் உறவினர்களாகப் பாவித்து போற்றுவதன் மூலம் வரலட்சுமி விரதம் இருந்த புண்ணிய பலன்களைப் பெறுவார்கள். மகத நாட்டைச் சேர்ந்த சாருமதி என்ற பெண், தனது புகுந்த வீட்டினரைப் போற்றிச் சிறப்பித்து வரலட்சுமியின் அருட்கடாட்சத்தைப் பெற்று, தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்த திருக்கதை உண்டு.