திருப்பரங்குன்றம் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா!
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை, கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு பூஜைகள் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கரத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் முடிந்து மாலை, பட்டு சாத்துப்படியாகி பல்லக்கில் எழுந்தருளச் செய்யப்பட்டது. வேல் மலைமேல் கொண்டு செல்லப்பட்டு காசி விஸ்வநாதர் கோயில் முன்உள்ள முருகப்பெருமான் கரத்தில் சேர்க்கப்பட்டது.உச்சிகால பூஜையின்போது, அங்குள்ள வற்றாத சுனை தீரத்தத்தில் வேலுக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. கிராமத்தினர் சார்பில் 105படி அரிசியில் கதம்ப சாதம் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் மலை அடிவாரத்திலுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் வேல் சாத்துப்படி செய்யப்பட்டு, பூஜைகள் முடிந்து, இரவு பூ பல்லக்கில் வேல் புறப்பாடாகி, மூலவர் கரத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டது.