திருவேங்கடநாதபுரத்தில் கருடசேவை கோலாகலம்
திருநெல்வேலி:நெல்லை அருகே திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி முதல் சனிகிழமையன்று கருட சேவை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.நெல்லை அருகே திருவேங்கடநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது. இக் கோயில் "தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை இங்குள்ள பெருமாளுக்கு செலுத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி சனிக்கிழமை கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று காலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலையிலிருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.இரவு சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி அலங்கார சப்பாரத்தில் படிசேவை செய்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். கருடசேவையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடந்தது. புரட்டாசி சனிக்கிழமையன்று பக்தர்களின் வசதிக்காக நெல்லை ஜங்ஷனிலிருந்து திருவேங்கடநாதபுரத்திற்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. வரும் அக்.1,8 மற்றும் 15ம்தேதிகளிலும் சுவாமிக்கு கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.