சேலம் கிருஷ்ணர் பொம்மைகள் புதுச்சேரிக்கு வருகை!
புதுச்சேரி: கிருஷ்ண ஜெயந்திக்கு தேவையான கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டின் பூஜை அறைகளில் கிருஷ்ணரின் படங்கள், சிலைகள் ஆகியவற்றை வைத்து பஜனைகள் பாடி சிறப்பு வழிபாடுகள் நடத்தி கிருஷ்ணரை வணங்குவது வழக்கம். இந்தாண்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா வரும் 25ம் தேதி வருகிறது. இதையொட்டி, காமராஜர் சாலை ஆனந்த ரங்கநகர் சந்திப்பில், கிருஷ்ணர் சிலைகள் சேலத்தில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளன. பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்றவற்றினால், செய்யப்பட்ட இந்த கிருஷ்ணர் சிலைகள் பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. மூன்றடி உயரமுள்ள கிருஷ்ணர் சிலை ஆயிரத்து 800 ரூபாய்க்கும், அரை அடி முதல் ஒன்றரை அடி உயரமுள்ள கிருஷ்ணர் சிலைகள் 200 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது. அழகிய வடிவத்தில் பல்வேறு வண்ணங்களில் விற்பனை செய்யப்படும் கிருஷ்ணர் சிலைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்ல துவங்கியுள்ளனர்.