கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கேரளா செல்லும் உறியடி பானை!
மானாமதுரை: மானாமதுரையில் தயாரிக்கப்படும் உறியடி பானைகள் கேரள மாநிலத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன. மானாமதுரையில் சீசனுக்கு ஏற்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது விநாயகர் சதுர்த்தி,கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட விழாக்கள் அடுத்தடுத்து வருவதால் விநாயகர் சிலைகள் மற்றும் உறியடி பானைகள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. வரும் 25ம் தேதி கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படும். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூன்று நாட்கள் விழா கொண்டாடப்படும். இதில் முக்கியமானது உறியடி பானை திருவிழா. கிருஷ்ண ஜெயந்தியன்று கேரளாவில் சிறிய அளவிலான உறியடி பானை பயன்படுத்தப்படுகிறது. விற்பனையாளர் செங்கோட்டை முருகன் கூறுகையில்: கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்கள் உறியடி பானை திருவிழா நடைபெற உள்ளது.தமிழகம் போல் அல்லாமல் கேரளாவில் சிறிய சைஸ் உறியடி பானையை பயன்படுத்துவார்கள். தமிழகத்தில் பானையினுள் பணம், காசு உள்ளிட்டவை இருக்கும். கேரளாவில் சிறிய பானையினுள் அகல் விளக்கு ஏற்றி வைத்திருப்பார்கள். விளக்கு எரிந்து முடிவதற்குள் பானையை உடைக்க வேண்டும் என்பது விதி. இதற்காக மானாமதுரையில் 5 ஆயிரம் உறியடி பானைகள் கொள்முதல் செய்துள்ளேன், என்றார்.