கும்பாபிஷேக பணி உரிமை கோரி கோயிலில் உள்ளிருப்பு போராட்டம்
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக பணிகளில் உரிமை கோரி, அனைத்து சமூகத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தனர். ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் ஏற்பாடு நடந்து வருகிறது. ஒரு சமுதாயத்தினர் மட்டும் நடத்தும் கும்பாபிஷேக பணிகளில் அனைத்து சமூக மக்களையும் அறங்காவலர்களாக நியமிக்க வேண்டி, அனைத்து சமூகத்தினர் சார்பில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதனிடையே இதை வலியுறுத்தி கோயிலில் நேற்று மாலை 6 மணிவரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் ஹரிகரன், துணை தாசில்தார் வடிவேல், டி.எஸ்.பி., சங்கரேஸ்வரன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், இன்று மாலை 4 மணிக்கு ராஜபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்படும் என கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.