உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நள்ளிரவில் வந்தது நவராத்திரி பவனி : குழித்துறையில் பூ பந்தல் வரவேற்பு

நள்ளிரவில் வந்தது நவராத்திரி பவனி : குழித்துறையில் பூ பந்தல் வரவேற்பு

மார்த்தாண்டம் : குழித்துறை வந்த சுவாமி விக்ரகங்களுக்கு நள்ளிரவில் பூ பந்தல் அமைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. நவராத்திரி பூஜையை முன்னிட்டு பத்மனாபபுரத்தில் இருந்து சரஸ்வதி தேவியும், வேளிமலையில் இருந்து முருகனும், சுசீந்திரத்தில் இருந்து முன்உதித்த நங்கை சுவாமி விக்ரகங்கள் ஆண்டு தோறும் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று முன்தினம் நவராத்திரி பவனி பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்டது. அழகியமண்டபம், முளகுமூடு, இரவிபுதூர்கடை, சாங்கை, கோட்டகம் உட்பட பல பகுதிகளில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பம்மத்தில் சிறுமியர் தாலப்பொலி ஏந்தி வரவேற்பு அளித்தனர். குழித்துறை போஸ்ட் ஆபிஸ் ஜங்ஷனில் சுமார் நூறு அடி தூரம் பூ பந்தல் அமைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 51 குத்துவிளக்குகள் ஏற்றப்பட்டது. இதை போல் பஞ்சவாத்தியம், மேளம் தாளம் போன்றவை இடம் பெற்றது. நள்ளிரவு ஒரு மணிக்கு சுவாமி விக்ரகங்கள் பவனி குழித்துறை மகாதேவர் கோயில் வந்தடைந்தது. நேற்று காலை 8.50 மணிக்கு திருவனந்தபுரம் நோக்கி பவனி புறப்பட்டது. நேற்று படந்தாலுமூடு, களியக்காவிளை வழியாக சென்று நெய்யாற்றின்கரை கோயிலை வந்தடைந்தது. நாளை திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலை சென்றடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !