ராமேஸ்வரம் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா
ராமேஸ்வரம்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அலங்கரித்த வெள்ளி மூசிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளியதும், கோயில் குருக்கள் மகா தீபாராதனை காட்டினர். பின், கோயில் நான்கு ரதவீதியில் விநாயகர் வலம் வந்தார். அப்போது, கோயில் யானை ராமலெட்சுமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. பின் விநாயகரை, யானை ராமலெட்சுமி வணங்கியதும், அங்கு கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். நேற்று கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
*முதுகுளத்துார்: காந்தி சிலை அருகே உள்ள சித்தி விநாயகர், வடக்கூர் செல்வவிநாயகர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுதந்திராகாந்தி தலைமையில் நடந்தது. விநாயகருக்கு படையலிடப்பட்டு, அன்னதானம் நடந்தது. கமுதியில், கமுதி சத்ரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சத்ரிய நாடார் பள்ளிகள், மகமக்கடை செல்வவிநாயகர் கோயில், முத்துமாரியம்மன் கோயில், சின்ன மாரியம்மன் கோயில், ராமசாமிபட்டியில் செல்வவிநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, படையல்கள் வழங்கபட்டது. அபிராமம் செல்வவிநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. நாளை அலங்கரிக்கப்பட்ட தேரில் வெண்கலத்தால் ஆன விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து செல்கின்றனர்.
திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கபட்டு பூஜைகள் நடந்தது. தொண்டி இரட்டை பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவாடானை பஸ்ஸ்டாண்டு ஆதிரெத்தினவிநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செயய்பட்டன. பாரதிநகரில் உள்ள விநாயகபெருமானுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.