வேண்டிய வரம் தரும் சுயம்பு துர்க்கை அம்மன்!
குரோம்பேட்டை : சுயம்பு துர்க்கையம்மன் கோவிலில், அமாவாசைக்கு முந்தைய நாள் இரவில், சதுர்த்தசி பூஜையில், தொடர்ந்து, ஒன்பது மாதங்கள் கலந்துகொண்டால், வேண்டிய வரம் கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாகும். குரோம்பேட்டை மேற்கு, லட்சுமிபுரம், பச்சைமலை அடிவாரத்தில், சுயம்பு துர்க்கையம்மன் கோவில் உள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் விவசாயி ஒருவர், ஏர் உழுது கொண்டிருந்தார். அப்போது, களப்பையில் ஏதோ தட்டுப்பட்டது. அந்த இடத்தில் மண்ணை தோண்டினார். கல் ஒன்று கிடைத்தது. அதன் ஒரு பகுதி உடைந்து, ரத்தம் வழிந்தோடியது. அப்பகுதி மக்கள், ஒரு பெரியவரை அழைத்து வந்து, நடந்ததைக் கூறினர். அந்த பெரியவர், ‘வெறும் கல் அல்ல; அது சுயம்பு துர்க்கையம்மன் சிலை’ எனக் கூறியுள்ளார். அப்பகுதி மக்கள் சுயம்பு துர்க்கை அம்மனை அங்கு வைத்து வழிபடத் துவங்கியதாகக் கூறப்படுகிறது.
உயிர் பலி இல்லை: பின், சிலை இருந்த இடத்தில் கொட்டகை அமைத்துள்ளனர். அதன் பின், 1990ம் ஆண்டு, ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பணம் வசூலித்து, கொட்டகையை கோவிலாக்க முடிவு செய்தனர். கோவில் கட்டப்பட்டு, 1993ல், முதல் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தது. கடந்த 2006ல், மண்டபம், குளம், பரிகார தெய்வங்களுக்கான கோவில்களும் கட்டினர். மற்ற அம்மன் கோவில்களை போன்று, இக்கோவிலில் உயிர் பலி கொடுப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இரண்டாவது வாரத்தில், பெரிய அளவில் திருவிழா நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சிகள்: நவராத்திரி விழா, 10 நாட்கள், பங்குனி உத்திரம், பால்குடம் எடுத்தல், சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி, கந்த சஷ்டி, குருபெயர்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள், சுயம்பு துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பாக நடத்தப்படுகிறது. அமாவாசைக்கு முந்தைய நாள் இரவில் நடக்கும், சதுர்த்தசி பூஜையில், தொடர்ந்து ஒன்பது மாதங்கள் கலந்துகொண்டால், வேண்டிய வரம் கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாகும். இக்கோவிலில் உண்டியல் கிடையாது; தீபாராதனை தட்டில் தட்சணை போடுவதும் கிடையாது. ஆனால், தினமும், நுாற்றுக்கணக்கானவர்களுக்கு கோவிலில் அன்னதானம் வழங்கப்படுவது சிறப்பாகும். தொடர்புக்கு: 93822 56699